ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்


ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் 'ஆதார் பே' மத்திய அமைச்சர் தகவல் | ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு விரைவிலேயே ஆதார் பே எனும் எளிய முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்தகவலை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதை நடைமுறைப்படுத்த 14 வங்கிகள் முன்வந்துள்ளன. விரைவிலேயே இது செயல்பாட்டுக்கு வரும் என்று அவர் மேலும் கூறினார். இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மேலும் சில வங்கிகளுடன் பேச்சு நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மக்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வர்த்தகரிடம் தெரிவித்தால் அவர் செலுத்த வேண்டிய தொகை குறித்த உறுதியை உங்களது கைரேகை பதிவு மூலம் மேற்கொள்வார். ஆதார் எண்ணுடன் இணைந்துள்ள உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எளிதாக வர்த்தகருக்கு மாறும் என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே இந்த முறையை சில வங்கிகள் ஆந்திர மாநிலத்தில் சோதனை ரீதியில் செயல்படுத்திப் பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய பீம், யுபிஐ பண பரிவர்த்தனை திட்டங்களும் ஆதார் அடிப்படையிலான பண பரிவர்த்தனை முறையுடன் ஒருங்கிணைக்கப்படும் என்று அவர் கூறினார். இந்தியாவில் தற்போது 111 கோடி மக்களிடம் ஆதார் எண் உள்ளது. இந்தத்திட்டம் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்டது. அப்போது இது இந்திய குடிமக்களின் சாதாரண டிஜிட்டல் அடையாள அட்டையாகத்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாக இது நிதி பரிவர்த்தனைக்கு வலுவான ஆதாரமாக மாறியுள்ளது என்று பிரசாத் குறிப்பிட்டார். இதுவரையில் 49 கோடி வங்கிக் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாதந் தோறும் 2 கோடி கணக்குகள் தற்போது இணைக்கப்பட்டு வருகின்றன. ஆதார் பே பரிவர்த்தனை முறை ஏற்கெனவே சில பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் இம்முறை மூலம் 33 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஜனவரி 15-ம் தேதி வரை ஆதார் அடிப்படையில் 8.39 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 2014-15-ம் நிதி ஆண்டில் ஆதார் அடிப்படையிலான வங்கிக் கணக்கில் ரூ. 36,144 கோடி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.