இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 3 புதிய சேவைகள் அறிமுகம்

 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 3 புதிய சேவைகள் அறிமுகம் | பணப் புழக்கத்தை குறைக்கும் வகையில் 'ஐஓபி ப்ரீபெய்டு கார்டு', 'ஐஓபி கனெக்ட்', 'ஐஓபி பே' என்ற 3 புதிய மின்னணு சேவைகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது. 'ஐஓபி விசா ப்ரீபெய்டு கார்டு' என்பது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை மின்னணு முறையில் தேவையானவற்றுக்கு செலவு செய்ய பயன்படும் கார்டு ஆகும். இந்த கார்டில் காந்தப்பட்டை மற்றும் இஎம்வி தொழில்நுட்பம் இருப்பதால் ஏடிஎம் இயந்திரம், ஸ்வைப்பிங் இயந்திரம், ஆன்-லைன் பரிமாற்றம் போன்றவற்றுக்கு பயன்படுத்த முடியும். ரகசிய பின் எண்ணை மாற்றும் வசதி, மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதி, கார்டு தொலைந்தால் வேறு யாரும் பயன்படுத்தாமல் தடுக்கும் வசதி, மாதாந்திர ஸ்டேட்மென்ட் பெறும் வசதி ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும். 'ஐஓபி கனெக்ட்' என்பது ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பயன்படுத்தும் செயலியாகும். இது ஏற்கெனவே உள்ள 3 செயலிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கு தொடங்க வங்கி கிளைக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும். உங்கள் அருகில் உள்ள ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம், பாஸ்புக் அச்சிடும் மையம் இருக்கும் மையங்களையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம். 'ஐஓபி பே' என்பது பலவகையான அம்சங்களை இணைத்த ஆன்லைன் கட்டணம் செலுத்தும் தளம் ஆகும். இதன் மூலம் வணிக தேவைகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும், வழிபாட்டு தலங்களுக்கும் பணம் செலுத்த முடியும். சென்னை புதுக்கல்லூரியின் தேர்வு கட்டணம் வசூலிப்பு இதில் முதன்முதலாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.