மடிக்கணினியை தொடு கணினியாக மாற்றலாம்..!


மடிக்கணினியை தொடு கணினியாக மாற்றலாம்..! | இன்றைய நவீன உலகில் எல்லாமே தொடு திரை தொழில்நுட்பங்களாக மாறிவிட்டன. ஸ்மார்ட்போன், டாப்லெட், தொடு கணினி, தொடுதிரை ஏ.டி.எம்., டிக்கெட் கவுண்டர்கள் என எல்லா இடங்களிலும் தொடு திரையை மையப்படுத்திய தொழில்நுட்பங்களே வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் நம்மிடம் இருக்கும் மடிக்கணினிகளை தொடுதிரை கணினிகளாக உருமாற்றும் தொழில்நுட்பம் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த 'நியோநோட்' என்ற நிறுவனம் தான் இந்த புதிய கருவியை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 'ஏர் பார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த யூ.எஸ்.பி. கருவியை பயன்படுத்துவது என்பது அவ்வளவு கடினமான செயல் இல்லை. பென்டிரைவ் போலவே இதை மடிக்கணினில் பொருத்தினால் போதும், சாதாரண மடிக்கணினி, 'டச்' ஸ்கிரீன் மடிக்கணினியாக மாறிவிடும். கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை ஸ்கிரீனின் மேற்பரப்பில் செலுத்தும் அந்த கருவி 'டச் ஸ்கிரீன்' வசதியை வழங்குகிறது. இதன் மூலம் ஸ்கிரீனை பெரிதாக்கலாம், விண்டோவை நகர்த்தலாம். இணையதள லிங்கை கிளிக் செய்யலாம். டச் ஸ்கிரீன் ஸ்மார்ட் போனில் செய்யக்கூடிய அத்தனை அம்சங்களையும் இதன் மூலம் செய்யமுடியும். குறிப்பாக கைவிரல்கள் மட்டுமின்றி எந்த பொருளைக் கொண்டும் ஸ்கிரீனை தொட்டு, நகர்த்தும் வகையில் வடிவமைத்திருக் கிறார்கள். இதற்காக எந்த பிரத்யேக மென்பொருட்களையும் நாம் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. இந்த கருவியின் ஒருபகுதியை யூ.எஸ்.பி. போர்ட்டிலும், மற்றொரு பகுதியை நமது மடிக்கணினி ஸ்கிரீனின் அடிப்பகுதியிலும் பொருத்தினால் போதும். முதற்கட்டமாக, 15.6 இன்ச் ஸ்கிரீன் மடிக்கணினிகளுக்கு மட்டுமே இந்த கருவி வெளியிடப்படவுள்ளது. விண்டோஸ் மற்றும் குரோம் இயங்குதளங்களில் இயங்கும் கணினிகளுக்காக தயாராகி இருக்கும் இந்த கருவியின் விலை 50 டாலர்கள்.